அரசின் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மக்கள் மத்தியில் விளம்பரம் செய்யப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கையனூர் என்ற இடத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார்.
பின்னர் முதலமைச்சர் திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், வரும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள்அதற்கான ரசீது விவசாயிகளிடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு என்ன செய்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்பதை குறிப்பிட்ட முதலமைச்சர், என்ன திட்டங்களை செய்திருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டவே ஊடகங்களில் விளம்பரம் செய்வதாக கூறினார்.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கும் மு.க.ஸ்டாலினால், அதனை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தி 5 லட்சத்து 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து சோளிங்கர் அடுத்த பாண்டியன்நல்லூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சாடினார். தமிழக அரசின் செயல்பாட்டை கண்டு ஸ்டாலின் எரிச்சலடைவதாகவும் கூறினார். இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் முழுமையாக திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.