முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2003 ஆண்டில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டுக்கான யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம் பட்டியில் நாளை தொடங்குகிறது.
ஆண்டுதோறும் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த யானைகளுக்கான சிறப்பு முகாம் தொடர்ந்து 48நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் உள்ள கோயில் யானைகள் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியிலுள்ள நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக வரத்தொடங்கியுள்ளது.
யானைகளின் வரவை எதிர்நோக்கி, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது, யானைகள் மற்றும் யானை பாகன்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், யானை கொட்டகைகள், பாகன்கள் தங்குமிடம், உணவு கூடம், யானைகள் குளிப்பதற்கு ஷவர் பாத் ஆகியன இதில் அடங்கும்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை முகாமிற்கு முதலாவதாக வந்து சேர்ந்தது.
லாரியின் மூலம் வந்த யானையை அறநிலையத்துறை அதிகாரிகள் உடல் எடை சரிபார்க்கப்பட்டதுடன், யானை மற்றும் பாகன்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொண்ட ஆவணங்களை சரிபார்த்த பிறகே அதிகாரிகள் முகாமிற்குள் அனுமதித்தனர்.
அபயாம்பிகையை அடுத்து கோவை பேரூர் கோயிலிலிருந்து கல்யாணி யானையும் புத்துணர்வு முகாமுக்கு வருகை தந்துள்ளது.
இன்று மாலைக்குள் அனைத்து கோயில் யானைகளும் புத்துணர்வு நலவாழ்வு சிறப்பு முகாமிற்கு வந்து சேர்ந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்குவதற்கும் அவை ஓய்வெடுப்பதற்கும் அவற்றின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் மற்றும் அதன் உடல் சார்ந்த மருத்துவ கவனம் பெறுவதற்கும் அளிக்கப்படுகின்ற வாய்ப்புதான் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆகும்.
எது எப்படியோ இனி கோயில் யானைகளுக்கு ஒரு மண்டல காலம் கொண்டாட்டம்தான்.