என்னை வைத்து மீம்ஸ் போட்டால், உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தாராளமாக செய்யுங்கள் என்று கூறியதாக தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை உருக்கத்துடன் பேசினார்.
தெலங்கானா கவர்னராகவுள்ள தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த போது, மீம்ஸ் கிரியேட்டர்களால் பல விதமாக விமர்சிக்கப்பட்டார். பெண் என்று கூட பாராமல் அவரை தரக்குறைவாக கூட மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். மாற்றுக்கட்சியிலுள்ள பெண் தலைவர்களும் தமிழிசை பற்றி தரக்குறைவாக மீம் போடுபவர்களை கண்டித்து பேசியதில்லை. ஆனாலும், மீம்ஸ் போடுபவர்கள் கூட, அக்கா உங்களை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும், ஆனால், நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்றே கூறி தமிழிசை பற்றி மீம்ஸ் போடுவார்கள். ஆனாலும், தமிழிசை மீம்ஸ் போடுபவர்கள் மீது ஒரு போதும் கோபப்பட்டது கிடையாது.
இதற்கிடையே, தமிழிசையின் நிர்வாக திறமையை கண்டு கொண்ட மத்திய அரசு அவருக்கு புதிதாக பிறந்த தெலங்கானா மாநில கவர்னர் பதவியை வழங்கியது. தமிழிசை கவர்னரானதும் தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அதன்பிறகு, மீம் கிரியேட்டர்கள் தமிழிசையை கண்டு கொள்வதித்லை. இந்த நிலையில், தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆனதையொட்டி, ' என் ஓராண்டு பயணம் ' என்ற பெயரில் தமிழிசை புத்தகம் எழுதியுள்ளார். சென்னையில் அந்த புத்தகத்தை பல்வேறு நிறுவனங்களின் ஊடகவியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் செய்தி ஆசிரியர்கள் முன்னிலையில் வெளியிட்டு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
அப்போது, நான் ஒரு நாளும், நான் கவர்னர் ஆவேன் என, நினைத்து பார்த்ததில்லை. பதவியேற்ற முதல் நாளே, விமர்சனங்களை எதிர்கொண்டன். இள வயது கவர்னர் எப்படி தெலுங்கானாவை சமாளிக்க போகிறார்' என்கிற கேள்வி எழுந்தது. நான் மகப்பேறு மருத்துவர் என்பதால், தான் புதிதாக பிறந்த தெலுங்கானாவை, குழந்தையை போல சிறப்பாக கையாளுவேன் 'என்று பதில் கூறியதாக தமிழிசை குறிப்பிட்டார்.
மேலும், தன்னை பற்றி மீம்ஸ் போடுபவர்களை பற்றியும் தமிழிசை தன் பேச்சில் குறிப்பிட்டார். ஒரு சகோதரர், 'என்னை வைத்து, 'மீம்ஸ்' போட்டால், அதிக பார்வையாளர்கள் பார்க்கின்றனர்' என்றார். அதற்கு, 'எனக்கு அவமானம்; உங்களுக்கு வருமானம் என்றால், தாராளமாக மீம்ஸ் போடுங்கள்' என்றேன். இதுதான் என் இயல்பு என்று தமிழிசை உருக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், அரசியலில், ஒரு பெண் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. என் வாழ்வில், துாங்காத இரவுகள் பல உண்டு. , தமிழகத்திலும், தெலுங்கானாவிலும் மக்களின் அன்பை மட்டும்தான் நான் பெற்றுள்ளேன்'' என்றும் தமிழிசை தெரிவித்தார்.
அதோடு, கொரோனா காலத்தில் தெலுங்கானா ராஜ்பவன் மக்கள் பவனாக செயல்பட்டது என்றும், 400 பேர் வரைக்கும் உணவை ஆளுநர் மாளிகையில் தயார் செய்து வழங்கியதாகவும் தமிழிசை பெருமையாக கூறினார்.