கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நாளை தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யானைகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்திலுள்ள கோவில்கள் மற்றும் மடாலயங்களைச் சேர்ந்த யானைகளுக்கு மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள், நடைபயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும். யானைகளைப் பராமரிப்பது குறித்த பல்வேறு பயிற்சிகள் பாகன்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு 13வது யானைகள் புத்துணர்வு முகாம் திங்கட்கிழமை தொடங்கி 48 நாட்கள் நடைபெறவுள்ளது.
புத்துணர்வு முகாமுக்காக யானைகளுக்கான கொட்டகைகள், பாகன்கள் தங்குமிடம், உணவுக் கூடம், யானைகள் குளிப்பதற்கு ஷவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி, நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் யானை கோமதி உள்ளிட்ட யானைகள் லாரிகள் மூலம் புத்துணர்வு முகாம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை யானை முகாமிற்கு முதலாவதாக வந்து சேர்ந்தது. யானையின் எடையை பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கும் பாகனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
இதனிடையே கோவை பேரூர் கோவில் யானை கல்யாணியை அதிகாலை லாரியில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டபோது, திமுக பிரமுகர் ஞானவேல் என்பவரும் அவரது மனைவி சுகந்தப் பிரியாவும் லாரி செல்ல விடாமல் தடுத்து சாலையில் அமர்ந்து வாக்குவாதம் செய்தனர். பேரூர் கோவில் யானைப் பாகன் யானையை சரிவர பராமரிக்காமல் துன்புறுத்துகிறார் என தாங்கள் கோவில் நிர்வாகத்திடம் புகாரளித்திருந்ததாகவும் பல நாட்கள் ஆகியும் பாகனை மாற்றாமல் வைத்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
தம்பதியிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக யானையை ஏற்றிய லாரி புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டுச் சென்றது.