கள்ளக்காதலை கண்டித்த கணவரை எரித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க. புதுப்பட்டி இடையன்குளம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க நிலையில் வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பநாய், தடவியல் நிபுணர்கள் போன்றோர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
வாலிபர் உடல் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வழக்கில் போலீசாருக்கு இறந்தவர் யார்? கொலையாளிகள் யார்? என்று கண்டறிவது சவாலாக இருந்து வந்தது. இந்த நிலையில் எரிக்கப்பட்டவரின் எலும்புக்கூடுகளின் டிஎன்ஏ எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இறுதியில் டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த முடிவின்படி இறந்தவர் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. நாகராஜ் செங்கல் காளவாசல்களில் வேலை செய்து வந்துள்ளார். அதிகமாக கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து நாகராஜின் மனைவி முத்துமாரி என்பவரிடம் தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துமாரி அவரது கள்ளக்காதலன் செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், முத்துமாரி கம்பம் புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள செங்கல் காளவாசல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது செங்கல் காளவாசல் உரிமையாளரான கம்பத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது. நாகராஜ், செங்கல் காளவாசல் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வதும், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகவும் இருந்து வந்தார். இது பிடிக்காத காரணத்தினால் முத்துமாரி செல்வராஜுடன் நெருங்கிப் பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் முத்துமாரியின் மூத்த மகள் திருமணத்திற்கு கள்ளக்காதலன் செல்வராஜ் அதிக உதவிகள் செய்ததன் காரணமாக இருவருக்குமான நெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நாகராஜ் தனது மகள் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது முத்துமாரியின் கள்ளகாதல் விவகாரம் அவரது கணவர் நாகராஜுக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார். இது முத்துமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கள்ளக்காதலுக்கு நாகராஜ் இடையூறாக இருப்பதாக செல்வராஜிடம் முத்துமாரி கூறியுள்ளார். இதனால் முத்துமாரி மற்றும் செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற நாளான ஜூன் 14ஆம் தேதி நாகராஜ் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துமாரி நாகராஜுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக்கொடுத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் சாக்குப் பைக்குள் போட்டு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து உத்தமபாளையம் காவல்துறையினர் முத்துமாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் கள்ளக்காதலன் செல்வராஜ் தலைமறைவானதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.