தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியில்' இயேசு விடுவிக்கிறார் ' என்ற அமைப்பின் பெயரில் மோகன் சி.லாசரஸ் கிறிஸ்தவ மத போதனைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மதபோதனை கூட்டத்தில் பேசிய மோகன் சி.லாசரஸ், இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை கூற, அது இணையத்தில் பரவி வந்தது. மோகன் சி.லாசரஸ் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மோகன் சி. லாசரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற உள் அரங்கு கூட்டத்தில், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மோகன் சி.லாசரஸ் பதில் அளித்துள்ளார். பொது கூட்டத்தில் அவர் பேசவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குதான் அவர் அவ்வாறு பதில் அளித்துள்ளார்'' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர்தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார். மோகன் சி.லாசரஸின் வருத்தத்தை புகார்தாரர்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
''நாட்டின் இந்த பன்முகத் தன்மைக் கொண்ட மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்த சூழலில் மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார். எனவே, மதபோதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மனுதாரர் மோகன் சி.லாசரஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்கிறேன்'' என்று தெரிவித்தார்.