திருவிடைமருதூர், மகாலிங்க சுவாமி ஆலயத்தின் மேற்கு கோபுரத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தில் அருள்புரியும் மூகாம்பிகை கீர்த்தியும் சக்தியும் மிக்க தெய்வமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
இந்த நிலையில் தான், புதன்கிழமையன்று கோயில் நடையைத் திறந்த போது, கோயிலில் உள்ள மேற்கு கோபுரத்தின் உட்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கியதைக் கோயில் நிர்வாகத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்குப் புகார் தரவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காகக் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போது கோயில் கோபுரத்தின் வழியே உள்ளே சென்ற திருவிடைமருதூர், மேல மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45) கோபுரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
தற்கொலை செய்துகொண்ட தட்சிணாமூர்த்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவர் எதற்காகக் கோயிலில் தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!