புதுச்சேரியில் செல்போனில் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடி வந்த 16 வயது சிறுவன், மூளை நரம்பு பாதிக்கப்பட்டதோடு, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களும் வெடித்ததால் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தது பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் மூளை நரம்பு பாதித்து உயிர் பலியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
புதுச்சேரி வில்லியனூர் மனவெளி பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி பச்சையப்பன் என்பவரது மகன் 16 வயதான தர்ஷன். (( GFX in )) 11ஆம் வகுப்பு படித்து வந்த தர்ஷனுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக பெற்றோர் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அதில் வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் ஃபயர்வால் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடுவது தர்ஷனின் வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளில் பின்னணியில் வரும் இசை, விளையாடும்போது ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்தும்.
அதனை கேட்டுக்கொண்டு விளையாடுவதையே பெரும்பாலானோர் விரும்புவர். அந்த வகையில், கேம் விளையாடும்போது, ஹெட்போனை காதில் பொருத்தி, ஒலி அளவை கூட்டி விளையாடுவது தர்ஷனின் வழக்கம் என்று கூறப்படுகிறது. பல மணி நேரத்துக்கு தொடர்ந்து அவ்வாறு தர்ஷன் விளையாடுவார் என்று கூறப்படும் நிலையில், திங்கட்கிழமை மாலை கேம் விளையாடும்போது அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தர்ஷன், மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுவனின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவன் தர்ஷன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தது தெரியவந்துள்ளது.