கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுத்தம் சோறுபோடும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. சுகாதாரமற்ற இடத்தில் பல நோய்கள் தஞ்சமடையும். குறிப்பாக, சுத்தமற்ற கழிப்பறையிலிருந்து காலரா, டைபாய்டு போன்ற பல தொற்றுநோய்கள் பரவுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் கழிவறையில் தண்ணீர் வராமல், குடிப்பதற்கும் குடிநீர் இல்லாமல், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசன் ஏரி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நீர் ஆதாரமாக இருந்துவந்தது. அண்மையில் நடந்த சாலை விரிவாக்க பணியின்போது மருத்துவமனைக்கு நீர் வரும் குழாய் உடைந்துவிட்டது. உடைந்த குழாய் பழுதுபார்க்கப்படாத நிலையில், மருத்துவமனைக்கான நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நோயாளிகள் குளியலறைகளைப் பயன்படுத்த முடியாமல் , மருத்துவமனை வெளியில் வந்து, விலைக்கு தண்ணீர் பாட்டில் வாங்கி பல்துலக்கி செல்கின்றனர்.
மருத்துவமனை கழிவறையில் நீர் வராத காரணத்தால் நோயாளிகள் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள தேநீர்க் கடையில், தேவைக்கேற்ப விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் வாங்கும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலர், மருத்துவமனையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, பொதுக் கழிப்பிடத்திற்குச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சுத்தம் இல்லாத கழிப்பறையால், மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகக் கவலை தெரிவிக்கும் நோயாளிகள், தங்களைப் பிற நோய்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்திலேயே அன்றாடம் வாழுகின்றனர்.
மேலும், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆர்ஓ பிளான்ட் பல நாட்களாகியும் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் , குடிப்பதற்கு நீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
நோயாளிகள் மட்டுமின்றி, மருத்துவமனையில் வேலைசெய்யும் துப்புரவுப் பணியாளர்களும் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகளின் இந்த பரிதாப நிலையைத் தீர்க்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் தலையாய கோரிக்கையாக உள்ளது.