திருச்சி விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என போனில் மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 8 மணியளவில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் விமானங்களுக்காக காத்திருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட ஒரு பெண், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களைப் பேசி அதிகாரியை குழப்பினார். ஒரு கட்டத்தில் விமான நிலையத்தில் வெடிகுண்டு போட்டு எல்லோரையும் தூக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார் அந்தப் பெண்.
இந்த மிரட்டல் பேச்சை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலாரம் ஒலிக்கச் செய்து உள்ளே இருந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். மிரட்டல் விடுத்த பெண் மனநோயாளியாக இருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், தொடர்ந்து அவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.