தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாமை தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாய்மார்கள் வசதிக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 15 குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கினார்.
சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொம்மை பரிசாக வழங்கினார்.
இதேபோன்று, தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தனர்.
கரூர், நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.