கோவை கரும்புகடையில் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்த வளர்ப்பு தாய் தந்தை உட்பட 4 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.
கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்லா - நஜூம்நிஷா தம்பதியினர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
இந்த தம்பதி காந்திபுரம் 5 கார்னர் பகுதியை சேர்ந்த ரகுபதி-மஞ்சுளா தம்பதியினரின் 4 வயது பெண் குழந்தையை சில மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்து, குழந்தையின் பெயரை மாற்றி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் இருக்கும் 4 வயது வளர்ப்பு மகளை பெற்றோர் இருவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழந்தையை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்ட போது குழந்தையின் உடலில் பல இடங்கள் வீங்கி காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் போலீசில் ஒப்படைத்த பொது மக்கள், குழந்தையை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். வளர்ப்பு தாய் - தந்தை இருவரிடமும் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி - மஞ்சுளா தம்பதிக்கு 7 வயது மற்றும் 4 வயதில் இரு மகள்கள் இருந்த நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மஞ்சு தனது காதலன் மாணிக்கம் என்பவருடன் சென்று விட, இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்க்க ரகுபதி சிரமப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரகுபதி தனக்கு அறிமுகமான சிக்கந்தர் என்பவர் மூலம், 7 வயது மகளை அமீனா என்பவருக்கும், 4 வயது மகளை அப்துல்லா - நிஜாமுநிஷா தம்பதிக்கும் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து வளர்ப்பு பெற்றோர் அப்துல்லா, நஜூம்நிஷா உட்பட 7 பேர் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காயம் ஏற்படுத்துதல், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வளர்ப்பு பெற்றோர் அப்துல்லா, நஜூம்நிஷா,சிக்கந்தர், 7 வயது குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்துள்ள அமீனா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் தாயின் காதலன் மாணிக்கம் ஆகிய 3 பேரை போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர். ரகுபதி,மஞ்சுளா , மாணிக்கம் ஆகியோர் கைதானால் மட்டுமே குழந்தைகள் விலைக்கு விற்கப்பட்டதா? 4 வயது குழந்தையின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் தழும்புகள் அப்துல்லா, நஜூம்நிஷா தம்பதிக்கு கொடுக்கும் முன்பு ஏற்பட்டதா? இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்பது குறித்தும் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.
தாலாட்டி வளர்க்க தாய் இல்லையென்று, தன்மை இல்லா நபர்களுக்கு தத்துக்கொடுக்கப்படும் சிறுவர் சிறுமிகளுக்கு என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொடுமையான சம்பவமே சாட்சி.