பி.டி. உஷாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய 35 ஆண்டுகளுக்கு பிறகு அவரின் குரு நம்பியாருக்கு பத்மஸ்ரீ விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
பி.டி. உஷா ... இந்தியாவின் தங்க மங்கையாக அறியப்பட்டவர். கடந்த 1986 - ஆம் ஆண்டு சியோல் ஆசியப் போட்டியில், 4 தங்கப்பதக்கம் ஒரு வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பயோலி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட பி.டி . உஷாவை உருவாக்கிய குருதான்... ஓ.எம். நம்பியார் என்பவர். பி.டி. உஷா பதக்கங்களை குவித்த காலத்தில் ஓ.எம். நம்பியாரின் பெயரும் அடிக்கடி உச்சரிக்கப்படும். ஆனால், கால ஓட்டம் எல்லாவற்றையும் மறந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த 1985 ஆம் ஆண்டே தடகளத்தில் சாதித்தற்காக பி.டி உஷாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டில் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதும் நம்பியாருக்கு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே பி.டி. உஷா சியோல் ஆசியப் போட்டியில் பதக்கங்களை அள்ளினார். இதனால், பி.டி. உஷாவின் குரு ஓ.எம். நம்பியாருக்கு பத்ம விருது வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பத்ம ஸ்ரீ விருது நம்பியாருக்கு வழங்கப்படவில்லை. பி.டி. உஷாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நம்பியாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தற்போது Parkinson என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு நம்பியார் படுத்த படுக்கையாகி விட்டார். படுக்கையிலேதான் எல்லாம் என்கிற நிலையில் இந்த ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனக்கு அளிக்கப்பட்ட விருதை கூட நேரில் சென்று பெற முடியாத சூழலில் அவர் உள்ளார். எனினும், நம்பியார் வீட்டுக்கு படையெடுத்த அவரிடம் பயிற்சி பெற்றவர்கள், நண்பர்கள், உற்றார் ,உறவினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். நினைவு இருப்பதால் நம்பியார் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறார். பி.டி. உஷாவும் உடனடியாக தன் குருவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தார். தன்னை உருவாக்கிய குருவுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டதுதான் தனக்கு வருத்தைத்தை தருவதாகவும் அதே நேரத்தில் இப்போதாவது விருது வழங்கப்பட்டதே என்று மகிழ்ச்சியடைவதாகவும் பி.டி. உஷா தெரிவித்தார்.
உரிய காலத்தில் கிடைக்காத அங்கீகாரமாவே நம்பியாருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ பார்க்கப்படுவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தியாவிலேயே பத்ம விருது பெற்ற முதல் தடகள பயிற்சியாளர் நம்பியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.