கதவிடுக்கில் விரல் நசுங்கியதால் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுக்க கோவை முத்தூஸ் மருத்துவமனை சென்ற சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆர்த்தோ சிறப்பு படிப்பு... குஜராத் ஆர்த்தோ கல்லூரியில் தங்கப்பதக்கம்... கோவையில் மருத்துவ சேவை செம்மல் விருது போன்றவற்றை வாங்கிய டாக்டர் முத்துசரவணக்குமாரின் மருத்துவ மனையில் தான் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவரது முத்தூஸ் குழுமத்தின் அங்கமாக கோவை சிங்கா நல்லூரில் டாக்டர் முத்தூஸ் எலும்புமுறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
இந்த மருத்துவமனைக்கு கடந்த 26 ந்தேதி நீலிக்கோணம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது 7 வயது மகள் ஹேமர்னாவுடன் சென்றார்.
21 ந்தேதி மைசூருக்கு உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது கதவிடுக்கில் சிறுமியின் இடது கை நடுவிரல் சிக்கி நசுங்கியதாகவும், அந்த விரலில் வலி அதிகமானதால் சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
வலியை குறைக்க சிகிச்சை அளிப்பதாக கூறி ஊசி போட்ட சிறிது நேரத்தில் சிறுமி மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது. அன்று முழுவதும் சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் தனியாக சிகிச்சைக்கு வைத்த மருத்துவர்கள், பெற்றோரை கூட உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
மறு நாள் பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில் சுய நினைவில்லாமல் இருந்த சிறுமியை பார்க்க அனுமதித்திள்ளனர். இந்த நிலையில் 27 ந்தேதி மாலையில் சுய நினைவு திரும்பாமலேயே அந்த சிறுமி பரிதாபமாக பலியானாள்.
மருத்துவமனையின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியம் காரணமாக தங்கள் மகள் பலியானதாக குற்றஞ்சாட்டிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்கப் போவதில்லை என்று போராட்டத்திலும் குதித்தனர்.
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்து பிணக்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு ஆரம்பத்தில் வலிப்பு ஏற்பட்டதாக கதை சொன்ன மருத்துவமனை நிர்வாகம் தற்போது அந்த மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ரத்தம் உறைந்து போனதால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
உலக மருத்துவமனை வரலாற்றிலேயே கைவிரல் நசுங்கிய சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு மூளையில் ரத்தம் உறையும் அளவிற்கு அவசர சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை, கோவை முத்தூஸ் மருத்துவமனைதான் என்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே இந்த மருத்துவமனையின் சரவணம்பட்டி கிளையிலும் இதே போல ஒரு சிறுமி ஒருவர் பலியானதாக கூறப்படும் நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சம்பம் தொடர்பாக நேரடியாக விரிவான விசாரணை நடத்தி சிறுமியின் உயிரிழப்பில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டுவருவதோடு, தவறிழைத்திருந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்க் கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.