கரூரில் 67 வயது முதியவர், 1 மணி நேரத்தில் 11 தேங்காய்களை காலால் உறித்து சாதனை படைத்துள்ளார்.
ஓடுற பாம்ப மிதிக்குற வயசு என்று, இளம் ரத்தமான இளைய பருவத்தினரை குறிப்பிடுவார்கள். ஆனால் கரூரை சேர்ந்த நபர் ஒருவர் 67 வயதிலும் திடமாக, தனது காலால் 1 மணி நேரத்தில் 11 தேங்காய்களை மிதித்து, உரித்து சாதனை படைத்து, அசத்தி உள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். 67 வயதாகும் இவர், தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கு சிறு வயதில் இருந்தே தேங்காய் உரித்து மட்டையை நீக்குவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. பொதுவாக தேங்காயை கையிலும், எண்ணிக்கை அதிகமென்றால் தேங்காய் உரிக்கும் மெஷினை வைத்து தேங்காய்களை உரிப்பார்கள். ஆனால் பாலகிருஷ்னனோ சற்று வித்யாசமாக, தேங்காயை புட்பால் போல காலில் மிதித்து, தேங்காய் மட்டையை உரித்து வருகிறார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தேங்காய் மட்டையை 3 நிமிடத்தில் உரித்து காட்டி அசத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இதை ஒரு சாதனையாக செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய அவரது உறவினர்கள், இன்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கரூர் நகராட்சி தினசரி சந்தையான காமராஜ் மார்கெட் பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வந்த பாலகிருஷ்ணன் தன் காலுக்கு தோதுவான தேங்காயை, மட்டையுடன் தேர்வு செய்தார்.
பின்பு, அந்த தேங்காயை தனியாக எடுத்து மண்ணில் வைத்து தனது ஸ்டைலில் காலால் மிதித்து அக்கு வேறு ஆணி வேறாக தேங்காய் மட்டையை பிரித்தெடுத்தார்.
இதனை அவரது உறவினர்களும், நண்பர்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். 1 மணி நேரத்தில் 11 தேங்காய்களின் மட்டைகளை உரித்து அசத்தினார். இது போன்ற சாதனைகளை என் வயதில், இதற்கு முன்னர் வேறு யாரும் செய்து இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. நான் இந்த சாதனையை செய்தது பெருமையளிக்கிறது என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.