கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் விழுந்து இறந்து போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- மல்லிகா தம்பதிக்கு விவேகன் என்ற மகன் உண்டு. மல்லிகாவின் சகோதரி மணிமேகலை இலங்கியனுரில் வசித்து வந்தார். சில நாள்களுக்கு முன், தங்கையை பார்க்க திருப்பெயர் கிராமத்துக்கு தன் இரட்டையர் மகன்களான விக்னேஷ் , சர்வேசுடன் மணிமேகலை சென்றிருந்தார். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ், சர்வேஷ், விவேகன் ஆகிய 3 குழந்தைகளையும் நீண்ட நேரமாகியும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் குழந்தைகள் கிடைக்காததால் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் கிராமத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, வீட்டின் அருகிலுள்ள சின்னேரி குளத்தின் கரையில் சிறுவர்கள் நடந்து சென்ற கால்தடங்கள் பதிந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், குழந்தைகள் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின்
தீயணைப்பு வீரர்கள் இரவிலேயே தேடுதல் பணியை தொடங்கினார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் , வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி உள்ளிட்டோர் குளத்தின் கரையில் முகாமிட்டு தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். தீயணைப்பு படை வீரர்களின் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷ் ,சர்வேஷ் சடலங்களை கண்டெடுத்தனர். விவேகனின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனால், கடலூரிலிருந்து பேரிடர் மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. இன்று காலை 7 மணியளவில் பேரிடர் மீட்பு குழுவினர் குளத்தில் இறங்கி படகு மூலம் தேடி கொண்டிருந்தனர். அப்போது, விவேகனின் உடலும் குளத்தில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் உடலையும் வேப்பூர் போலீசார் உடற் கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடல்களை கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறியழுதது பரிதாபமாக இருந்தது. சகோதரிகள் இருவருமே தங்கள் குழந்தைகளை இழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.