அம்பாசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு பணியாற்றும் 9 அரசு ஊழியர்கள் உயிர் பயத்துடன் பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரத்திலுள்ள 70 பள்ளிகளின் ஆசிரியர்கள் அவ்வப்போது தங்கள் பணி காரணமாக, இந்த கட்டடத்துக்குள் வந்து செல்வது வழக்கம்.
மாணவ- மாணவிகளுக்கு தேவையான பொருட்களும் இந்த கட்டத்தில்தான் பாதுகாத்து வைக்கப்பட்டது. ஆனால், கட்டடம் மோசமான நிலையில் இருப்பதால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கோவில் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஆவணங்களை சேர்த்து வைக்கும் அறையின் ஓடுகள் சேதமடைந்து மழையில் ஒழுகுவதால், ஆவணங்களை சேமித்து வைக்க முடியாத நிலையில் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
கட்டடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்பூர பகுதிகள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. அறிவிப்பு பலகையோ பரிதாப நிலையில் காணப்படுகிறது. கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதோடு, பாம்புகள் உள்ளிட்டவையும் அலுவலகத்துக்குள் நுழைந்து ஊழியர்களை பயமுறுத்துகின்றன. இதனால், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிலை உள்ளது. இங்கு பணியாற்றும் 9 ஊழியர்களும் தங்கள் நிலையை வெளியே கூற முடியாத அளவுக்கு புலம்பி வருகின்றனர்.
கட்டடம் இடிந்து உயிர்ப்பலி வாங்கும் முன், அம்பை வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கட்டடம் கட்டும் வரை இந்த அலுவலகத்தை மாற்று இடத்துக்கு மாற்றி விடலாம் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.