பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் ஹொராயின் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்துக்கும், மனிதர்களின் உடல் நலனை சீரழிப்பதில் போதைப் பொருள் பயன்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதனால், பிராந்திய அளவில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வகையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஒன்றாகக் கைகோர்த்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் , இலங்கை மற்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு ஹெராயினைக் கடத்த முயற்சி செய்த போது பிடிபட்டது. அவர்களிடமிருந்து ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின், 18 கிலோ மெத்தாம் பெட்டமைன் பிடிபட்டது. ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கடந்த 15 ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஒரு குடோனில் 45 கிலோ Ephedrine போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மைதீன், சென்னையைச் சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இரண்டு கும்பல்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 பேரை சென்னை பெருங்குடியை அடுத்த காரப்பாக்கத்தில் இந்தியப் போதைப் பொருள் தடுப்பு பிரிவின், சென்னை மண்டல போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்களின் பெயர் நவாஸ், முகம்மது அஃபனாஸ் என்று தெரியவந்துள்ளது. இருவரும் தான் பாகிஸ்தான் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குத் திட்டம் வகுத்துக்கொடுத்து, மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரும், பாஸ்போர்ட் இல்லாமல், சென்னையில் 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில்,நவாசை பிடிக்க, இண்டர்போல் உதவியை நாடியுள்ள இலங்கை அரசு ஏற்கெனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருட்கள் எப்படி சர்வதேச நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன எனும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருட்களை கடத்தல் கும்பல் மீன் பிடிப்பதைப் போலவே ஹெராயின், அபின் ஆகியவற்றைப் படகுகளில் ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லும். அங்கு, இலங்கை, மாலத்தீவு கொடியுடன் மீன் பிடிப்பதைப் போலவே நடித்து மற்ற கடத்தல் காரர்களுக்கு டெலிவரி செய்துவிடுவார்கள். அவர்கள் மூலம் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குப் போதைப் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டும். அங்கிருந்து, படகுகள் மூலம் போதைப்பொருட்கள் கைமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஒன்று இயக்குவதையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கும்பலை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார், இலங்கை, ஆஸ்திரேலியா நாட்டு போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.