சென்னையிலும் கோவையிலும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 120 கோடி ரூபாய்க்குக் கணக்கில் காட்டாத சொத்துக்கள், 5 கிலோ தங்கம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயேசு அழைக்கிறார் என்னும் பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மதப்பிரச்சார நிறுவனங்கள் வைத்துள்ள பால் தினகரன், கோவையில் காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா பள்ளி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். இவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மதப் பிரச்சாரக் கூட்டங்களில் வரும் வருவாயைக் கணக்கில் காட்டாமல் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்துச் சென்னையில் பாரிமுனை, பசுமை வழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள இயேசு அழைக்கிறார் நிறுவனங்கள், கோவையில் காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா பள்ளி உள்ளிட்ட பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் புதன்கிழமை முதல் வருமான வரித்துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற ஆய்வில் 120 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் காட்டாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு முதலீடுகள் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலும், வெளிநாடுகளில் பெறப்பட்ட நிதியை வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் 5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமானம் மற்றும் சொத்துக்களைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்புச் செய்தது தொடர்பாக அடுத்த வாரம் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.