கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதிலாக,அரசே ஏன் கையகப்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கரை, குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வில், சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோவிலுக்கு எந்த வருமானமும் இல்லை என்றும், ஆட்சியர் அலுவலகம் அமைப்பதால் மாதம் 1.3 லட்சம் ரூபாய் வாடகை கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையை நீதிபதிகள் வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.