அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைதிபூங்காவாக உள்ள தமிழகம், திமுக வெற்றி பெற்றால் கலவரபூமியாக மாறிவிடும் என விமர்சித்தார்.
எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டைதான் உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட முடியாது என்றும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
கல்பாக்கம் அருகே, செய்யூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தாம்பரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக சாடிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.