தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த அரண்மனைப்புதூர் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிய ஓ.பன்னீர் செல்வமே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றார். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை ஓ.பி.எஸ். கண்டுபிடிக்க தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் போது, ஓ.பன்னீர் செல்வம் இதே பொறுப்பில் இருப்பாரா என்பதே கேள்விக்குறிதான் என்றும் ஸ்டாலின் கூறினார். அதனைத் தொடர்ந்து, மதுரை செக்கானூரணி அ.கொக்குளம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்பதில் மாற்றமில்லை என்றார். நூறு நாள் வேலைத்திட்டத்தை முறைப்படுத்தி 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.