பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவிலும் எளிதாக நடந்து செல்லும் வகையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக சாலையில் ஓரங்களில் டியூப் லைட் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
பழனியில் வரும் 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. பழனி கோயிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்துக்கு இந்த முறை தமிழக அரசு , அரசு விடுமுறை என்று அறிவித்திருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாதம் முழுவதுமே பக்தர்கள் தைப்பூசத்துக்கு பழனிக்கு யாத்திரை செல்வார்கள். தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, சிவகாசி, விருதுநகர் கம்பம், தேனி, வத்தலகுண்டு போன்ற பகுதிளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அதே வேளையில், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் சாலையில் நடந்து செல்ல பக்தர்கள் சிரமங்களை சந்தித்தனர். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பாதை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக செம்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலை முழுவதும் இரவு நேரத்தில் வெளிச்சம் கிடைக்கும் வகையில் டியூப் லைட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் டியூப் லைட் வெளிச்சத்தில் பக்தர்கள் எளிதாக நடந்து செல்ல முடிகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.