தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பதம் பார்த்துள்ளது. பாடுபட்டு விளைவித்து அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில் அவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம், வாகைகுளம், செக்காரகுடி, கொம்புகார நத்தம், தளவாய்புரம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன. ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கோவில்பட்டி, கயத்தார், கடம்பூர், மலைப்பட்டி, எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி, சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேவதானம் பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வெளியேறும் தண்ணீரால், பல நூறு ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சாத்தூர் அருகிலுள்ள ஒ.மேட்டுப்பட்டி, பெத்து ரெட்டிபட்டி, என்.மேட்டுப்பட்டி என்.சுப்பையாபுரம், ஓடைப்பட்டி, கரிசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், மக்காச்சோளம், சூரியகாந்தி, சோளம், பருத்தி மற்றும் பாசிப்பயிறு, தட்டைப்பயறு உள்ளிட்டவற்றை பயிரிட்டிருந்தனர்.
சரியான விளைச்சல் இல்லாமலும் படைப்புழு உள்ளிட்ட பிரச்சனைகளாலும் 40 சதவீத விளைச்சலே இருந்த நிலையில் தொடர் மழையால் அவை நீரில் மூழ்கி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்திலும் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் மழையில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண் அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.