தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும்,20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
இதற்காக முன்கள பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது.
இதில், முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.