பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் புளியங்குளம் என்னுமிடத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தொடர்ந்து 7 நாளாகக் கன மழை பெய்தது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாகப் பாபநாசத்தில் 18 சென்டி மீட்டரும், மணிமுத்தாற்றில் 16 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இதனால் இரு அணைகளில் இருந்து மூன்றாவது நாளாக உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிக அளவாக 52 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்றைய நிலவரப்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர், துணையாறுகளில் இருந்து வரும் நீர் என மொத்தம் 28 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணியில் பாய்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், சேரன்மகாதேவி, சங்கன்திரடு, அரியநாயகிபுரம் ஆகிய ஊர்களில் ஆற்றுவெள்ளம் வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.