பிரபல படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின் முழு முயற்சியில் குயிலுகுப்பம் கிராமத்தில் குடிசை வீடுகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் உள்ள குயில் குப்பம் கிராமத்தில் 64 இருளர் குடும்பங்கள் உள்ளன.
இந்த மக்கள் 50 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். கனமழை போன்ற நேரங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்து அவதிப்பட்டு வந்தனர்.
இந்த கிராமத்தை சென்னை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சென்று பார்த்தார்.
பின், இந்த கிராமத்தையே தத்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவு செய்தார். அதன் அடிப்படையில் குயிலுகுப்பத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஏனோ தானோ என்று இந்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கவில்லை.இதற்காக ஒரு முழு மாதிரி வீடு , இரண்டு படுக்கை அறை, ஒரு ஹால், வீட்டின் உள்ளேயே கழிப்பறையுடன் கூடிய குளியல் அறை, சமையல் அறைக கட்டி பார்க்கப்பட்டது.
பெயின்ட், டைல்ஸ், தண்ணீர் குழாய் வசதி , மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் மாதிரி வீட்டுக்கு செய்யப்பட்டது.
பிறகு அதே மாதிரியில் 64 வீடுகளும் அழகுற கட்டப்பட்டன. தற்போது, வீடுகளின் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டன.
வீடுகளுக்கு டி.வி., கேஸ் அடுப்பு, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, பீரோ, சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சாதனங்களை இயக்குவது குறித்தும் இருளர் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும், குயிலு குப்பம் கிராமத்தில் ரூ.57 புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதிக்காக ரூ. 13 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும்பணி முடிந்துள்ளது.
64 குடும்பங்களுக்கும் வருவாயை பெருக்கும் வகையில் சொந்தமாக கறவை மாடுகள் வழங்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அபிராமிநாதன் கூறுகையில், ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை குடிசை இல்லாத கிராமமாக்க வேண்டுமென்பது என் கனவு.
செங்கல்பட்டு துரை என்பவர் குயில்குப்பம் கிராமம் பற்றி சொன்னார். இந்த மக்கள் சாதாரண ஓலை குடிசையில் வசித்து வந்தனர். சுந்தர் ராஜன் என்பவர் எந்த லாபமும் இல்லாமல் தன் உழைப்பையும் தந்து வீடுகளை அழகாக கட்டிகொடுத்தார்.
64 பேருக்கும் 650 சதுர அடியில் வீடுகள் கட்டிகொடுத்துள்ளோம். ஒவ்வொரு வீட்டின் உள்ளே 6 அடி உயரத்தில் டைல்ஸ் போடப்பட்டுள்ளது.
தற்போது வரை ரூ. 6 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடித்து எஞ்சியிருப்பவர்களுக்கு வீடுகளை ஒப்படைத்து விடுவோம்'' என்றார்.
குயில்குப்பத்தில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ''இது போன்ற கான்கிரீட் வீடுகள் எங்களுக்கும் கிடைக்கும் என்று நாங்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
மழைகாலத்தில் ஓழுகும் வீடுகளுக்குள் பரிதாகமாப நாங்கள் இருந்தோம். இப்போது டைல்ஸ் பதித்த வீடுகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.
நாங்கள் கட்டட வேலைக்கு செல்லும் போது இது போன்ற டைல்ஸ் பதித்த வீடுகளில் வசிக்க முடியுமா... வாழ முடியுமா என்று கனவு காண்போம்.
எங்களுக்கு அதே போன்ற வீடுகளை இலவசமாகவே ரோட்டரி சங்கத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இதனால், எங்களின் அடுத்த தலைமுறையினர் இந்த வீடுகளில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்கின்றனர்.