ராணுவ வீரர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, தாங்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை குறைந்த விலைக்கு சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பணமோசடி குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
சமூக வலைதளங்கள் மூலமாகவும், ஓஎல்எக்ஸ் போன்ற விற்பனை தளங்கள் மூலமாகவும் இரண்டாம் தர விலைக்கு வீட்டு உபயோகப் பொருட்களை தேடுபவர்களை குறிவைத்து வடமாநில கும்பல்கள் மோசடிகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருவது தெரியவந்துள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த நாகராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர், இரு சக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் உள்ள விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் உள்ள எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர் தன்னை ஒரு ராணுவ வீரர் எனவும், பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் இரு சக்கர வாகனத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக ராணுவ வீரரிடம் பேரம் பேசி உள்ளார்.
முதலில் 3 ஆயிரத்து 150 ரூபாய் கூரியர் செலவு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் எனவும் அதன் பின், இருசக்கர வாகனம் பார்சலில் வீடு வந்தவுடன் மீதி பணத்தை அனுப்புமாறு ராணுவ வீரர் தெரிவித்ததை நாகராஜ் நம்பி பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
உடனடியாக இரு சக்கர வாகனத்தை பார்சல் செய்தது போன்றும் அதை வாகனத்தில் ஏற்றுவது போன்ற போட்டோவை அனுப்பினார். அதன் பின் தன் பெயரில் இருசக்கரவாகனத்தை மாற்றி தருவதாகவும் அதற்கு 9 ஆயிரம் செலவாகும் என்றும் அந்த ராணுவ வீரர் கூறியுள்ளார். இவ்வாறாக பல காரணங்கள் கூறியதால் 32 ஆயிரம் ரூபாய் வரை கூகுள் பே மூலம் நாகராஜ் அனுப்பி உள்ளார். அதன் பின்னரும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டதால் சந்தேகமடைந்த நாகராஜ், அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராணுவ வீரர் என்று கூறியதால் தான் நம்பி ஏமாந்து விட்டதாக நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை செய்ததில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் வடநாட்டில் போலி முகவரி உள்ள வங்கிக் கணக்கிற்குச் சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் அடிக்கடி செல்போன் எண்களை மாற்றுவதால் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.