சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனது வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து முள்ளை வெட்டிப் போட்டவரிடம் பேசி, சுமூக தீர்வு கிடைக்க உதவிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார்.
கருப்பு ரெட்டியூரில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்தோர் பயன்படுத்தி வந்த செல்வம் என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த பாதையை அவர் திடீரென முள்ளை வெட்டி அடைத்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி அங்குள்ள சுவாதி என்ற 7-ம் வகுப்பு பயிலும் சிறுமி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அதை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகி டி.எம்.செல்வகணபதியை தொடர்புகொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, அங்கு சென்ற அவர், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேசி பிரச்சனையை முடித்து வைத்தார். இதற்காக அந்த சிறுமி ஸ்டாலினை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.