அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனில் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக லால்குடியை சேர்ந்த ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் உள்ள கீழ் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - சாவித்ரி தம்பதியின் மகன் ராஜூ. திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி. யில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.பின்னர், அமெரிக்கா சென்று எம்எஸ் மற்றும் பிஎச்டி படித்துள்ளார். அமெரிக்காவில் பல்வேறு ஜ.டி நிறுவனங்களில் பணியாற்றிய நிலையில் ராஜூவின் திறமையை அறிந்த அமெரிக்கா ராணுவம், பென்டகனின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக ராஜூவை நியமித்துள்ளது.
இந்த பதவி அமெரிக்க ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரியின் பதவிக்கு நிகரானது . பென்டகனின் இந்த பதவிக்கு ராஜூ விண்ணப்பிக்கவே இல்லை.ஆனாலும் ராஜூவின் திறமைக்காக அமெரிக்க ராணுவம் அவருக்கு இத்தகைய கவுரவத்தை அளித்துள்ளது.
ராஜூவுக்கு பிருந்தா என்ற மனைவியும் அஸ்வின், அபிஷேக் என்ற இருமகன்களும் உள்ளனர். பிருந்தா அமெரிக்கா அரசின் சுகாதாரத்துறையில் ஐ. டி புரோகிரமராக பணி செய்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இரு மகன்களையும் கர்நாடக சங்கீதம் கற்க வைத்துள்ளார் ராஜூ. அமெரிக்காவில் ராஜூவின் மகன்கள் கர்நாடக கச்சேரி நிகழ்ச்சி நடத்துவதும் உண்டு.
இது குறித்து மணக்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான விஜயகுமார் கூறியதாவது,''எங்கள் கிராமத்தில் பிறந்த அவர் அமெரிக்க ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்ற செய்தி எங்களுக்கு மட்டுமல்லாது இந்த கிராம மக்களும் மணக்கால் ஊராட்சி மக்களையும் பெருமைப்பட வைத்துள்ளது '' என்றார்.