கோழி இறைச்சி முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவாது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பறவைக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, தலைமை செயலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேரளா மாநிலத்தில் வாத்துகளிடையே பறவை காய்ச்சல் ஜனவரி 4ம் தேதி கண்டறியப்பட்டது என்றும், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பறவை காய்ச்சல் நோய் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், சந்தேகத்திற்குரிய திடீர் கோழி இறப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.