தமிழருவி மணியன் அரசியலில் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். காந்திய மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து அவர் பணியாற்றிக் வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த பிறகு டிசம்பர் 30ஆம் தேதி தமிழருவி மணியன் ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டார்."இனி இறப்பைத் தழுவும் வரையில் நான் அரசியலுக்கு வர மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜனவரி 10- ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழருவி மணியனும் கலந்து கொண்டார்.85 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான ஏற்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார்.காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தவும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தோடு இணைக்கப்படும் என்ற ஒரு செய்தி உலவி வருவது உண்மையானது அல்ல. ரஜினி மக்கள் மன்றத்தை காந்திய மக்கள் இயக்கம் சகோதர இயக்கமாகவே பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்த போதும், அரசியலை விட்டு விலகுவதாக தமிழருவி மணியன் அறிவித்தார். பின்னர், மனதை மாற்றிக் கொண்டு, ரஜினி காந்தை பற்றிக்கொண்டு தன் அரசியலை தொடர்ந்தார்.
ரஜினியும் அரசியலுக்கு வர மறுத்ததால், மீண்டும் அரசியலில் இருந்து வெளியேறுவதாக தமிழருவி மணியன் அறிவித்தார். மீண்டும் சில நாட்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தமிழருவி மணியன் அரசியலில் தொடர்கிறார்.
தமிழருவி மணியனின் அடுத்து யாருடன் சேர்ந்து அரசியல் களத்தில் ஈடுபடுவார் என்கிற கேள்விதான் இப்போது தொக்கி நிற்கிறது.