மதுரையில் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக பஞ்சு பொங்கலிட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாக்கெட்டில் உள்ள மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அரைத்த அட்ராசிட்டி பொங்கல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதாகட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி பகுதியில் பாஜக மகளிரணியினர் வரிசையாக பானைகளில் தீமூட்டி பொங்கலிட்டனர்.
பவர்ஸ்டார் என தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்ட நடிகர் சீனிவாசன் பங்கேற்ற பொங்கல் விழா செங்கத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் சிறிய அளவிலான பானையில் தீமூட்டி பொங்கல் வைத்தனர்.
இந்த நிலையில் மதுரையில் நடிகை குஷ்புவை அழைத்து பொங்கல் விழா கொண்டாடிய பாஜக மகளீரணியினர், ஒரே ஒரு பானையில் மட்டும் நிஜமாக பொங்கல் வைத்தனர். மற்றபடி அந்த இடத்தை சுற்றி மண்பாணையில் பஞ்சு வைத்து பால் பொங்குவது போல டம்மியாக செட்டப் செய்து வைத்திருந்தனர்.
செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்ததும் உண்மையாகவே தீமூட்டி பொங்கலிடுவது போல அந்த செட்டப் பானை அருகில் அமர்ந்து பொங்கலிடுவது போல மகளீரணியினர் நடித்தனர்.
அதற்கு முன்பாக பாரம்பரிய முறைப்படி பொங்கலிடுவதை போல காட்டிக் கொள்வதற்காக பாக்கெட்டில் இருந்த மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அரைக்கவைத்த அட்ராசிட்டியும் அரங்கேறியது.
அருகில் தொண்டரணி பெண் ஒருவர் பூமி அதிர உலக்கையுடன் வெற்று குந்தானியை இடித்துக்கொண்டு நிற்க, அரிசி இல்லா ஆட்டு உரலை சின்சியராக ஒரு பெண் தொண்டர் சுற்றிக் கொண்டிருந்தார்.
மற்றவர்கள் கூட புகைப்படம் எடுத்து முடித்தவுடன் தங்கள் ஆக்டிங்கை நிறுத்திக் கொள்ள, மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அரைந்த அந்த பெண் தொண்டரோ இடைநில்லா பேருந்து போல வேற லெவல் பெர்பார்மன்ஸ்..!