பரமத்தி வேலூர் அருகே 60 வயது பெண்ணின் ஆண் நண்பரால் அவரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரையடுத்த நல்லூர் அருகேயுள்ள வாழ்நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராணி . கணவரை இழந்த ராணி தன் மகன் விஜயகுமார் என்பவருடன் வசிக்கிறார். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 46 வயது சுப்பிரமணியத்துக்கும் ராணிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனால், ராணியின் மகன் விஜயகுமாருக்கும் சுப்ரமணியத்துக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் , கடந்த 6 ஆம் தேதி காலை விஜயகுமார் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஜயகுமாரின் தாய் ராணியையும் சுப்ரமணியத்தையும் காணவில்லை. இதனால், போலீஸாருக்கு தாய் ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், 8 ஆம் தேதி காலையில் நல்லூர் போலீசார் மணியனூர் பிரிவு ரோடு அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, இருச்சக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரித்தனர். இதில், விஜயகுமாரை கொலை செய்ததை சுப்ரமணி ஒப்புக் கொண்டார். விசாரணையில் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி தாயார் ராணியிடமும் தகராறு செய்து வந்துள்ளார். கள்ள தொடர்பு பற்றியும் திட்டியுள்ளார். கடந்த 5 ஆ ம் தேதி தமிழக அரசின் பொங்கல் பரிசை பெற்ற ராணி மகனுக்கு ரூ.500 சுப்பிரமணிக்கு ரூ.200 கொடுத்துள்ளார். அன்றைய தினம் இரவு சுப்ரமணியத்துக்கும் விஜயகுமாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சுப்ரமணியத்தின் செல்போனை பிடுங்கிய விஜயகுமார் அருகிலிருந்த சரஸ்வதி நகர் என்ற இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, பின்னாலேயே சென்ற சுப்ரமணி விஜயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், ராணியிடத்தில் விஜயகுமாரை கொலை செய்து விட்டதாக சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சாலையில் கிடந்த விஜயகுமாரின் உடலை தூக்கி சென்று மறைவான இடத்தில் போட்டு விட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
சுப்பிரமணியை பரமத்தி நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பழனிகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீஸார், ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர் . தலைமறைவாக உள்ள ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.