கொரோனா தடுப்பூசி அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளைமறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு, மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கான இரண்டாம் கட்ட ஒத்திகை நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இந்தப் பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிட்டதுடன், மத்திய அரசின் பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாகவும், தமிழக அரசின் பணிகளை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, தடுப்பூசி போடும் பணியை பல கட்டங்களாக அனைத்து மாநிலங்களிலும் நடத்துவது குறித்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். நாளைமறுநாள் மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி தொடங்குவது எப்போது என்பது குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.