பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தினசரி இயக்ககூடிய 2050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 17ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில், 3 நாட்களுக்கு தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என இயக்கப்பட இருக்கின்றன.
சென்னையில் இருந்து கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.