தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் 2 இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றார்.
இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது குறித்த ஒத்திகை நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.
தேசிய அளவில் 125 மாவட்டங்களில் ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்கள் அதில் இடம்பெற்றன. அந்த வரிசையில், சில மாநிலங்கள் தவிர்த்த, நாடு தழுவிய ஒத்திகை இன்று மீண்டும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 190 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும், தடுப்பூசி ஒத்திகையையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷவர்தன், குறுகிய காலத்தில் இந்தியா தடுப்பூசியை உருவாக்கியிருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கும் என்றும் குறிப்பிட்டார். முதலில் சுகாதாரத்துறையினருக்கும் அதன் பிறகு முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி திட்ட ஏற்பாடுகளை ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார்.
இதனிடையே, மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஏற்பாடுகள், நாளொன்றுக்கு ஒரு முகாமில் 100 பேருக்கு தடுப்பூசி போட ஆகும் நேரம் போன்றவை கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில், குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை சரிசெய்யும் வகையில் தடுப்பூசி போடும் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.