சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பில் இருந்து துறைமுகம் வரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரே நாளில் 400 கண்டெய்னர் லாரிகளுக்கு தலா 4ஆயிரத்து 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து காவல்துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.
சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பு தொடங்கி துறைமுகம் வரையிலான சாலையில் கண்டெய்னர் லாரிகள் விதியைமீறி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் தினம் தினம் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதற்கிடையே சாலையை ஆக்கிரமித்து மக்களுக்கு இடையூறு செய்யும் கனரக வாகனங்களுக்கு அபராதத்துடன் ஓட்டுனர் உரிமமும் பறிக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளுக்கு தற்போது பலன் கிடைத்து வருகின்றது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் விதிமீறி சாலையை ஆக்கிரமித்து நிறுத்திய சில கண் டெய்னர் லாரிகளால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உண்டானது. ஆரம்பத்தில் ஆக்கிரமிப்பு லாரிகளை திருப்பி அனுப்பிய காவல்துறையினர் விதி மீறும் ஓட்டுனர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் படி தக்க பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து முறையான வரிசையில் செல்லாமல் சாலையில் ஏறிவந்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சாலையை ஆக்கிரமித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்ட லாரிகளை மறித்து உடனடி அபராதமாக தலா 4 ஆயிரத்து 100 ரூபாய் விதிக்கப்பட்டது.
அந்தவகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் விதிமீறிய 400 க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு கேஷ்லெஸ் மெஷின் மூலம் உடனடி அபராதம் விதித்து ரசீதுகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
போலீசார் பெருந்தொகையை அபராதமாக விதிக்கும் தகவல் தெரியவந்ததும், லாரி ஓட்டுனர்கள் அடக்க ஒடுக்கமாக லாரிகளுக்கு என்று அனுமதிக்கப்பட்ட வரிசையில் மட்டும் லாரிகளை இயக்க தொடங்கினார் இதனால் மதியத்திற்கு மேல் அங்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
தற்போது அந்த 100 ரூபாயை மறந்து போக்குவரத்து போலீசார், தங்கள் கடமையை திறம்பட செய்தாலும் ஒரு சில கண்டெய்னர் லாரிகளின் உரிமையாளர்கள் தங்கள் லாரிகள் விரைவாக துறைமுகம் செல்ல வேண்டும் என்பதற்காக தைரியமாக விதியை மீறிச்செல்ல ஓட்டுனர்களை தூண்டி வந்த நிலையில் போக்குவரத்து போலீசார் விதித்த அதிரடி அபராதம் அவர்களை திகிலடைய செய்துள்ளது.
போலீசார் இதே போல தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.