ராஜபாளையத்தில் மகளிர் குழுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் கம்பெனியினர் வசூலுக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமி மீது சூடான பாலை ஊற்றியதில் அவர் காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிக்காரர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் சிறிய தொழில் செய்பவர்களுக்கும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாரக் கடனாக கொடுத்து வசூல் செய்து வருகின்றனர் . ராஜபாளையம் அரசு மருந்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருபவர் சேர்ந்த அர்ஜுனன்- கலைமதி தம்பதி மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிக்காரர்களிடம் 35,000 ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக கடன் தவணையை செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களான அர்ஜுன் , கலைமதி கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர். கடந்த இரண்டு மாத தவனை கட்ட வேண்டிய நிலையில் கலாவதி 1950 ரூபாய் கட்டுவதற்கு பதிலாக 1300 ரூபாய் கட்டியுள்ளார்.
மீதி பணம் 650 கொடுக்கும் போது ஜனவரி மாதத் தவணையும் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக்காரர்கள் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு, கலைமதி மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் , ஆத்திரமடைந்த கந்து வட்டிக்காரர்கள் டீக்கடையில் இருந்த சூடான பால் பாத்திரத்தை எடுத்து கலைமதி மீது ஊற்ற முயன்றுள்ளனர். இந்த களேபரத்தில் அருகில் நின்று கொண்டிருந்த கலைமதி மகள் ஸ்ரீ வர்த்தினி மீது பால் பட்டதில் அவரின் உடல் வெந்து போனது. காயமடைந்த சிறுமி ஸ்ரீ வர்த்தினி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அடி ஆட்களை கொண்டு மிரட்டுவதாகவும் மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசி மிரட்டுவதாகவும் கலைமதி குற்றம் சாட்டியுள்ளார். சிறுமி மீது பால் ஊற்றிய சம்பவத்துக்கு ராஜபாளையம் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி மீது சூடான பால் ஊற்றி காயப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாதர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜபாளையம் போலீஸார் கொலை மிரட்டல் விடுத்தது. தகாத வார்த்தையால் திட்டியது போன்ற கீழ் பிரிவுகளின் கீழ் கந்துவட்டிக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.