தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பின் மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரியில், கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இந்த கும்பல் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து, வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டனர்.
வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளாணந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில், அருளாணந்தம் என்பவன் பொள்ளாச்சி நகர் அதிமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கில் கைதான அருளானந்தத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் தப்பவிடக்கூடாது என வலியுறுத்திய மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குற்றவாளிகளை அதிமுக அரசு காப்பாற்ற முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கூறி திமுக மகளிரணியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தோர் நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.