திருக்கழுக்குன்றத்தில் புற்றை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்ததில் நல்லபாம்பு பலியானது. மேலும், மூன்று நல்ல பாம்புகள் தப்பியோடி உயிர் பிழைத்தன.இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சங்கு மேட்டு தெருவில் 75 வருடம் பழமையான தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் பின்புறம் சுயம்புவாக உருவான பாம்பு புற்று உள்ளது. இந்த பாம்பு புற்றில் பக்தர்கள் முட்டை வைத்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் வைக்கும் முட்டைகளை புற்றில் இருக்கும் பாம்புகள் விழுங்கி விட்டு செல்வதை பக்தர்கள் பல முறை நேரில் கண்டுள்ளனர். பக்தர்கள், குழந்தைகள் யாருக்கும் இந்த புற்றில் வசிக்கும் பாம்புகள் தொந்தரவும் செய்ததில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
கோயிலின் பின்புறம் செந்தில் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. நேற்று கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செந்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துள்ளார், பாம்பு புற்றையும் இடித்து ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து சமன் செய்துள்ளனர். அப்போது, புற்றுக்குள் இருந்து சீறியபடி வெளியே வந்த நல்ல பாம்பு ஒன்று உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது. மூன்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர்.
புற்று இடிக்கப்பட்டு நல்லபாம்பு கொல்லப்பட்டதால், கோயில் பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் நேரில் வந்து விசாரித்தபோது, அங்கு குவிந்த பொதுமக்கள் பாம்புப் புற்றை இடித்தவர்களை கைது செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, செந்தில் மற்றும் எடையூர் பகுதியை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் ஜெய்சங்கர் இருவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் கைது கைது செய்யப்பட்டு வேட்டையாடுதல், வனவிலங்குகளுக்கு ஊறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில், ஜெய்சங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். புற்றை உடைக்க பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.