முசிறி அருகே காமாட்சிபட்டியில் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜூஸ் என நினைத்து குடித்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா காமாட்சி பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி பெயர் சுகன்யா. இந்த தம்பதிக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உண்டு. கடந்த 3- ஆம் தேதி மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஜீவா வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணையை ஜூஸ் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டான். சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியும் விழுந்துள்ளது. இதனைக் கண்டு பதறிய தாய் சுகன்யா குழந்தையை தூக்கியுள்ளார். அப்போது, குழந்தையின் வாயில் இருந்து மண்ணெண்ணெய் வாடை வந்துள்ளது.
இதனால், அக்கம் பக்கத்தார் உதவியுடன் தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு சென்றனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை இறந்து போனது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போர் கண்களை கலங்க வைத்தது. தவறுதலாக மண்ணெண்ணெய் குடித்து குழந்தை இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி காவல் நிலைய போலீஸார் கூறுகையில், '' குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த பொருள்களையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் விதத்தில் வைக்கக் கூடாது'' என்று அறிவுறுத்தியுள்ளனர்.குழந்தை ஜீவா இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.