சென்னையில் தனியாக வாழும் தாயிடம் செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த இக்னியஸ்சுந்தர்- முத்துலெட்சுமி தம்பதி . இந்த தம்பதிக்கு சேவியர் பிரகாஷ் அஜய் என்ற 18 வயது மகன் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இக்னியஸ் சுந்தரை விட்டு முத்துலட்சுமி பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார். மகன் அஜய் தன் தந்தையுடன் வசித்து வந்தார். சென்னையில் தொழிற்பயிற்சி கல்லூரியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்த அஜய், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி திறக்காததால் சென்ட்ரிங் வேலைக்கு அஜய் சென்று வந்தார். சமீப காலமாக அஜய், அடிக்கடி தனது தாய் முத்துலட்சுமியிடத்தில் போனில் பேசி வந்தார். தந்தை சுந்தரத்துக்கு மகன் தன் தாயிடத்தில் அடிக்கடி பேசுவது பிடிக்கவில்லை. இதனால், அஜயை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, தாயிடம் பேசுவதை தவிர்த்த அஜய் மனமுடைந்த நிலையில், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் தன் அறைக்குள் சென்று, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அஜயின் அறை வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அறைக்குள் அஜய் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த அஜய் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயிடம் பேச முடியாத ஏக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனாகாபுத்தூர் மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.