2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து அதிக கட்டணம் என கருதி வாய்ப்பை தவற விட்ட மாணவர்கள் 8 பேர், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கு பின், தங்களுக்கும் இடம் ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கில் மாணவர்கள் 8 பேருக்கும் 2-ம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் கலந்தாய்வில் நீதிமன்றம் சென்ற மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதா? அல்லது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதா? என குழப்பம் எழுந்ததால், கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில், நீதிமன்றம் சென்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு எட்டப்பட்டதை அடுத்து, கலந்தாய்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.