லோன் ஆப் மூலம் உடனடி ஆன்லைன் கடன் வழங்கி, சட்ட விரோதமான முறைகளில் வசூலிக்க முயன்ற 2 சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிகள், நிபந்தனைகளை படித்துப் பார்க்காமலேயே செயலிகளை டவுன்லோட் செய்வதன் மூலம் நமது தகவல்களை திருட நாமே வாய்ப்பு கொடுக்கிறோம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
லோன் ஆப் மூலம் கடன் பெற்றவர்களின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், கந்துவட்டி தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பெங்களூரை சேர்ந்த ட்ரூ கிண்டில் டெக்னாலஜி எனும் நிறுவனம் வாயிலாக மிரட்டல் வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனர்கள் தொடர்புடையவை என்றும் அவர் கூறினார்.
லோன் ஆப் மூலம் கடன் பெற்றவர்களை மிரட்டி பணத்தை வசூலிக்க பெங்களூரில் கால் சென்டர் நடத்தியுள்ளனர் என்றும், லோன் ஆப் மூலம் கடன்பெறுபவர்கள் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் வகையில் ஒப்புதல் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். லோன் ஆப் மூலம் கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது என விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல் ஆணையர் குறிப்பிட்டார்.
லோன் ஆப் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது விதிகள் மற்றும் நிபந்தனைகளை படித்துப் பார்க்காமலேயே ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் நமது தகவல்களை திருட நாமே வாய்ப்பு கொடுக்கிறோம் என்றும் காவல் ஆணையர் எச்சரித்தார்.