தமிழக அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து நீர்மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்த்திபனூரில் 11 குடும்பங்களுக்குக் கறவை மாடுகளை வழங்கினார்.
கால்நடை வளர்ப்போர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஆந்திர தெலங்கானா முதலமைச்சர்களுடன் பேச்சு நடத்தி நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பரமக்குடியில் நெசவாளர்கள், வணிகர்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது அரசு நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகளையும், கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். வணிகர்களுக்கும், நெசவாளர்களுக்கும் பாதுகாப்பாக அதிமுக அரசு விளங்குவதாகவும் தெரிவித்தார்.
வறட்சியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் செழிப்பாக்குவதற்காகக் காவிரி - குண்டாறு இணைப்பை 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பரமக்குடியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேவேந்திரர் சமுதாய மக்களிடையே உள்ள பிரிவுகளையும் ஒன்றிணைத்துத் தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பதற்குத் தமது அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். இன்னும் 30 நாட்களில் அது நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.
திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டணம்காத்தானில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார். அதன்பின் ராமநாதபுரம் பாரதி நகரில் சமுதாயத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார்.
இராமநாதபுரத்தில் ஜமாத் தலைவர்கள் உடனான கலந்துரையாடலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுக அரசு இஸ்லாமியப் பெருமக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகத் தெரிவித்தார்.