புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மலைவாசஸ்தலங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள், இயற்கைச் சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில், குவிந்த சுற்றுலா பயணிகள், வெள்ளிநீர்வீழ்ச்சி,கோக்கர்ஸ்வாக், மோயர் சதுக்கம், தூண்பாறை, பைன்மரக்காடுகள், பிரையண்ட்பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்ததோடு, மேக கூட்டங்களை கண்டுரசித்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், புத்தாண்டை முன்னிட்டு திரண்ட சுற்றுலா பயணிகள், அருவிகளில் நீராடியும், மசாஜ் செய்தும், பரிசல் சவாரி மேற்கொண்டும், சுடச்சுட மீன் உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர்.
பல்லவர் கால வரலாற்றோடு, தமிழர்தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்பாட்டு அடையாளமாக விளங்கும், மாமல்லபுரத்தில், அர்ஜுனன் தபசு, உருண்டைக்கல், ஐந்து ரதம், கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஆன்லைனில் பதிவு செய்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, தண்ணீர் வரத்து நன்றாக இருப்பதால், குற்றால அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில், சுற்றுலா பயணிகள், ஆனந்தமாக நீராடினர்.