புதிய நம்பிக்கை, புதிய எதிர்பார்ப்புகளுடன் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 2020ம் ஆண்டு நிறைவடைந்து, 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. நள்ளிரவில் புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளிலேயே ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சமூகவலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மதுரையில் குடியிருப்பு வளாகத்தில் புத்தாண்டை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும், புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.
சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கூடும் கோவாவில் கொண்டாட்டத்திற்குத் தடையில்லை. இதனால் ஏராளமானோர் அங்கு புத்தாண்டை ஆடல் பாடல் இசை விருந்து என்று விடிய விடியக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையில் வழக்கமாக உற்சாகம் கரைபுரளும் மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. அங்கு செல்லக்கூடிய சாலைகளும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாலங்களுக்கு சீல்வைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலையில் சோதனையில் இருந்த போலீசார் உரிய காரணமின்றி அங்கிருந்து வந்தவர்களைத் திருப்பியனுப்பினர்.
புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு தேனாம்பேட்டையில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். சென்னையில் உள்ள பாலங்கள், பாண்டிபஜார் பகுதி ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.