தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், தமிழக அரசு பல துறைகளில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், மலரும் இப்புத்தாண்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த கால இருள் நீக்கி கதிரொளி பரப்பி தமிழக மக்களுக்கு விடியல் தரும் புத்தாண்டை உளமார வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எண்ணற்ற சவால்களும், சங்கடங்களும் நிறைந்த 2020 ஆம் ஆண்டின் தாக்கம் ஒரே நாளில் தணிந்துவிடாது எனக் கூறியுள்ள ஸ்டாலின், அவற்றை நீக்குவதற்கும், மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைப்பதற்கும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என திமுகவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும் புதிய ஆண்டில் உதவட்டும் என்றும், நம்மால் இயன்ற வகையில் அனைவருக்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சியை பகிர்ந்தளிப்போம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அதிமுக, மீண்டும் ஆட்சி அமைக்க வழிசெய்யும் ஆண்டாக 2021 -ம் ஆண்டு மலர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்