அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை உடைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை கவிழ்க்க நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேந்தமங்கலத்தில் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் என பழனிசாமி உறுதி அளித்தார். தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் கண்களுக்கு தெரியாது என்றார்.
பின்னர் திருச்சி சென்ற முதலமைச்சர், தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை உடைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், ஆனால் அது வெற்றி பெறாது என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பொய்யை கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை என்று விமர்சித்த முதலமைச்சர், தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு திமுக செயல்படுவதாகவும் சாடினார்.
அதனைத் தொடர்ந்து முசிறி கைகாட்டி, கண்ணனூர், பாலக்கரை, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆங்காங்கே பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கண்ணனூரில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.